தான் உயிரோடு இருப்பதை அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக விவசாயி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெகல்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் சாஹேப் (55). விவசாயியான இவர், தந்தை தஸ்தாகிரி கடந்த வருடம் இறந்தார். இதை யடுத்து சொத்துகளைப் பிரிப்பதில் இவருக்கும் இவர் சகோதரர் ஹூசைன் சாஹேப் புக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் தனது சகோதரர் இறந்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை தனது பெயரில் மாற்றிக்கொண்டார்.
இதுபற்றி தகவலறிந்த கமல், தனது வாக்காளர் அடையாள அட்டை நகலை எடுத்துக் கொண்டு வருவாய் துறை அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டார். ஆனால், அந்த அதிகாரிகள் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த கமல், ‘நான் உயிரோடு இருக்கிறேன். என் சகோதரர் போலி ஆவணங்கள் மூலம், தந்தையின் சொத்துகளை அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதில் எனக்கும் பங்கிருக்கிறது. வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரிக்கின்றனர்’ என்றார். இந்த புகார் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







