ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 23 பாம்புகள் பிடிபட்ட நிலையில், பழைய டயர்கள் அனைத்தும் ஜூன் 26 ம் தேதி ஏலமிடப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்று போக்குவரத்து மேலாளர் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த குக்கிராமங்களுக்கும், தூத்துக்குடி திருநெல்வேலி, திருச்செந்தூர், கோயம்புத்தூர் போன்ற வெளியூர்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து பணிமனையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் பயன்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட டயர்களை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் அங்கு மழை காலங்களில் நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் உள்ளே பயன்பாடற்ற டயர்களை அப்புறப்படுத்தபடாததால், விஷ பாம்புகள் அதிகம் நடமாடுவதாகவும், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி, பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாம்பாட்டிகள் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வரவழைக்கப்பட்டனர். பணிமனை வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பயன்பாடற்ற டயர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் பாம்பாட்டிகள் தேடுதலின் போது வெளியே வந்த பாம்புகளை பிடித்தனர். ஒரே நேரத்தில் நல்ல பாம்பு, கட்டுவிரியன் பாம்பு என 23 பாம்புகள் பிடிபட்டது.
இதனைப் பார்த்த போக்குவரத்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், பயன்பாடற்ற டயர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழில் செய்தி ஒளிபரப்பான நிலையில், பழைய டயர்கள் அனைத்தும் ஜூன் 26 ஆம் தேதி ஏலமிடப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்று பொது மேலாளர் விருகையன் தகவல் தெரிவித்தார்.
—சௌம்யா.மோ






