புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது புதுக்கோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல்இன மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதியில் இரட்டை டம்ளர் முறை மற்றும் கோவிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிக்கப்படாதது தெரிந்து வழக்குகள் பதிவு செய்து இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வடிவேஸ்வரன் மனைவி ஸ்ரீதேவி, வேலு மனைவி தேவி, சேகர் மனைவி சக்திதேவி உள்ளிட்ட பெண்கள் நாகுடி காவல் நிலையத்தில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு அன்று கொடுத்துள்ள புகாரில் பெருங்காடு ஊராட்சிக்குட்பட்ட வைராண்டி கண்மாயில் 3 பெண்கள் குளித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த தெற்கு மஞ்சக்கரை பகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும் பட்டியலின மக்களை சாதி பெயரை சொல்லி திட்டி குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்க கூடாது என்றும், கம்பால் அடித்து விரட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்கள் நாகுடி காவல் நிலையத்தில்புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையை தொடர்ந்து மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஐயப்பன், முத்துராமன் ஆகிய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்தது அறிந்த ஐயப்பன், முத்துராமன் ஆகிய இருவரும்
தலைமறைவாகிவிட்டனர். தப்பி ஓடிய ஐயப்பன் மற்றும் முத்துராமனை நாகுடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததோடு தீண்டாமை சம்பவம் நடந்த நிலையில் புத்தாண்டிற்கு பிறகு அறந்தாங்கி பகுதியில் குளத்தில் குளிப்பது தொடர்பாக தீண்டாமை நடந்த கொடூரம் பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளது.







