மதுரையில் சுகாதாரமின்றி செயல்பட்டதாக பிரபல உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் ரியாஸ் மஹால் என்ற சைவம் மற்றும் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் பேரில் உணவுத்துறை அதிகாரிகள் நேரில் சென்று உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது குளிர்சாதன பெட்டிக்குள் பழைய சிக்கன் வகைகள் 3 கிலோவும், மற்றும் சமைத்த சாதம் 4 கிலோவும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் உணவகத்தில் சமைக்கும் சமையலர்கள், உதவியாளர்கள் மற்றும் காய்கறிகள் வைத்துள்ள இடம் ஆகியவை சுத்தம் இல்லாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரியாஸ் மஹால் உணவகத்தின் உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் உணவகத்தில் உரிமையாளர் உரிய விளக்கம் அளிக்காமல் இருந்துள்ளார். மேலும் உணவகத்தின் குறைகளையும் அவர் சரி செய்யாமல் இருந்துள்ளார். இதனால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக ரியாஸ் மஹால் உணவகத்துக்கு சீல் வைத்தனர்.







