வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒரே நாளில் இடைவிடாது
கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மேலும் சீர்காழி வட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
கனமழையால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள சீர்காழி உமையாள்பதி காலனியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதோடு பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை பார்வையிடுகிறார்.
இதையடுத்து சீர்காழி பேருந்து நிலையத்தில் வெள்ள பாதிப்புக்கு உண்டான பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்குகிறார்.