30 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது” – மு.க.ஸ்டாலின்

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். அவருக்கு பல தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த கடிதத்தில், அந்த மடலில் அவர் கூறியிருப்பதாவது: மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்ட ஆயிரமாயிரம் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளிலும் அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம் நெகிழ்ந்தேன். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், பிற மாநில முதலமைச்சர்கள், பிற மாநில ஆளுநர்கள், இந்திய தேசிய காங்கிரஸின் மதிப்பிற்குரிய சோனியா காந்தி அம்மையார், சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறினர். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க பொதுச் செயலாளரும் அன்பு நண்பருமான விஜயகாந்த்,  கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோரும், தமிழறிஞர்கள், பல்துறை வல்லுநர்களும் உளம் கனிந்த வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.  வெளிநாடுவாழ் தமிழர்கள், அயல்நாட்டுத் தூதர்கள் என எல்லைகள் கடந்து குவிந்த வாழ்த்துகளால் மானுடத்தின் பேரன்பு மழையில் நனைந்து மகிழ்ந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் இந்த உழைப்பு, இந்திய ஒன்றியம் முழுவதும் தேவைப்படும் காலம் இது. சமூகநீதி எனும் நெடும்பாதையில் திராவிட இயக்கம் மேற்கொண்டுள்ள நெடும்பயணம் என்பது இந்திய ஒன்றியத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகாட்டியுள்ளது. சமூகநீதிக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக இந்திய அரசியல் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்படுவதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களின் உரிமைக்கான குரலாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழங்கியவர் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியலை நெருக்கடி சூழ்ந்தபோதெல்லாம் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராளியாக – இந்தியாவின் குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தீர்மானிக்கும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

இன்று இந்தியாவை மதவாதப் பாசிச சக்திகள் சூழந்துள்ளன. பன்முகக்தன்மையைச் சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது. மாநில உரிமைகள் பறிபோகின்றன. தாய்மொழிகளை அழித்து ஆதிக்க மொழியினைத் திணிக்கும் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்கிறது. எந்த ஒரு தனி மனிதரும் சுதந்திரச் சிந்தனையுடன் வாழ முடியாத நெருக்கடி சூழ்ந்துள்ளது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது. அதனால்தான், இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியுள்ளது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைமையில், கழகப் பொருளாளர் அன்பு நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் வரவேற்புரையாற்ற, சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற என் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மரியாதைக்குரிய மல்லிகார்ஜூன் கார்கே, ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் – ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் – சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநிலத் துணை முதலமைச்சர் – ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தின் நோக்கம், என்னை வாழ்த்துவதற்கானது அல்ல. இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்கள் உரிமையுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே! விழாவில் அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் அதனை வலியுறுத்தினர். நமக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் எதிராக இருப்பவர்களின் சூழ்ச்சியையும் வியூகத்தையும் உணர்ந்து கொண்டு, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். காஷ்மீர் தொடங்கி ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய அரசியலில் ஆற்றிய பங்கை எடுத்துரைத்தனர். இன்றைய நிலையில் தி.மு.கழகம்தான் இந்தியாவுக்குத் திசைவழியைக் காட்ட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டனர்.

அண்மைச் செய்தி :”பெண்களை பின் தள்ளக் கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒன்றுபட்ட – உறுதியான அணியாக நாம் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதையும், காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு மூன்றாவதாகப் புதிய அணி அமைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் எவ்விதப் பயனையும் தராது என்பதையும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நாம் ஓரணியாக இணைந்து நின்று பாசிச சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதையும் ஏற்புரையாக மட்டுமல்ல, பிறந்தநாள் சூளுரையாகவும் தெரிவித்தேன்.  உயிர்நிகர் உடன்பிறப்புகள் திரண்டிருந்த திடலில், உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட அந்தப் பிரகடனத்தை, உங்களின் அயராத உழைப்பால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்.  தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உடன்பிறப்புகளின் கடமை. நம்முடைய உழைப்பால் உருவாகும் மகத்தான வெற்றியும், நாம் கட்டமைக்கும் கூட்டணியின் வியூகத்தால் இந்திய ஒன்றிய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முழுமையான வெற்றியாக மாற்றும்.

அந்த வெற்றிக்கு முன்னோட்டமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் நமது கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அன்புச் சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் . அரசியல் எதிரிகளின் அவதூறுகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும், பொய்க் குற்றச்சாட்டுகளையும் வாக்காளர்கள் எனும் மக்கள் சக்தி மொத்தமாகப் புறக்கணித்து, தி.மு.கழக அரசு மீதும், கழகத்தின் தலைமையிலான  கூட்டணி மீதும் பெரும் நம்பிக்கை வைத்து இந்த வெற்றியைத் தந்துள்ளது.

தந்தை பெரியாரின் பேரனான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காகக் கலைஞரின் மகனான நான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை செய்தபோதே, இது இடைத்தேர்தல் மட்டுமல்ல,  தி.மு.க ஆட்சியை மக்கள் மதிப்பீடு செய்யும் எடைத்தேர்தல் என்று தெரிவித்தேன்.  ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சரியான முறையில் எடைபோட்டு, தி.மு.க கூட்டணியே நாட்டுக்குத் தேவை என்பதை முடிவு செய்து, சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading