1970-களில் தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருந்த எம்ஜிஆர், திமுக-வை விட்டு விலகி புதிய கட்சியை தொடங்கிய நேரம்… பல்வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நிலவியது. அப்போதைய அரசு விளம்பர சுவரொட்டிகள் மீதான வரியை உயர்த்தியதால் நிதி நெருக்கடி காரணமாக திரைப்படத்திற்கு எந்தவித விளம்பர சுவரொட்டிகளும் வேண்டாம் எனக் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.
அதிமுக-வை தொடங்கிய ஆறே மாதங்களில் திண்டுக்கல் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு மிக நெருங்கிய நேரத்தில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியிடப்பட்டது. சென்னையில் வெளியிட திரையரங்கு கிடைக்காத நிலையில், தனது சாந்தி திரையரங்கில் வெளியிட ஏற்பாடு செய்தார் சிவாஜி கணேசன். எம்ஜிஆரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் வித்தானது உலகம் சுற்றும் வாலிபன்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் அத்தனை பின்னணி பாடகர்களும் பாடிவிட்ட நிலையில், சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடல் ஏதும் இல்லாமல் இருந்தது. எம்ஜிஆருக்கு இது மனக்குறையாக இருந்ததால், வேறு ஒரு காட்சியைக் கூறி படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டார் எம்ஜிஆர். ஆனால் அவரது ஆலோசகர்கள் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த நிலையில், மீண்டும் நடத்தினால் இன்னும் தாமதமாகும் என கூற… படத்தின் டைட்டில் பாடலை சீர்காழி கோவிந்த ராஜனை பாடவைத்தார் எம்ஜிஆர். அடைமழையாய் அன்று தொடங்கிய வெற்றி இடைவிடாமல் எம்ஜிஆரை அரியணையில் அமர வைத்த பின்னரே ஓய்ந்தது.
1973ம் ஆண்டு மே 11ம் தேதி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 200 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என பிலிம்பேர் விருதுகளை எம்ஜிஆருக்கு பெற்றுத்தந்தது உலகம் சுற்றும் வாலிபன்.இதன் தொடர்ச்சியாக ‘கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்க எண்ணிய எம்ஜிஆரின் முயற்சி பலிக்கவில்லை.
கவிஞர் வாலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் வாலிக்கு வாய்ப்பில்லை என எம்ஜிஆர் கூற, நான் இல்லையென்றால் உங்கள் படமே இல்லை என வாலி கூற, ஏன் என எம்ஜிஆர் கேட்க. வாலிபன் என்ற பெயரில், வாலி நான் இல்லாவிட்டால் ‘உலகம் சுற்றும் பன்’ ஆகிவிடும் என வாலி கூற… பிறகென்ன தன் பங்குக்கு பாடல்களை எழுதினார் வாலி.










