இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பஞ்சேஸ்வர தலமான திருக்கேத்தீச்சரம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையக் கட்டடத்தின் திறப்பு விழா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர். 11 தளங்களுடன், 600 பேர் அமரும் வகையிலான திரையரங்குடன் கூடிய அரங்குகளுடன் கலாசார மையக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பஞ்சேஸ்வர தலமான திருக்கேத்தீச்சரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள்: அதானி விவகாரம்: செபி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்துலகிற்கும் அருளாட்சி புரியும் ஈசன்..! தேவாரப் பாடல் பெற்ற பஞ்சேஸ்வர தலமான இலங்கையின் மன்னார் மாவட்டத்தின் திருக்கேத்தீச்சரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தேன். சர்வேஸ்வரனின் அருளால் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், வெற்றியும் தொடரட்டும். இந்த புண்ணிய திருத்தலம் இரு நாடுகளின் பிணைப்பை பிரதிபலிக்கும் என்பது சிறப்பு வாய்ந்தது..! என்று பதிவிட்டுள்ளார்.







