மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவில் 6 கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது. அடுத்தகட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பாபுல் சுப்ரியோவுக்கும் அவரது மனைவி ரஷ்னா ஷர்மாவுக்கும் இன்று கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பாபுல் சுப்ரியோ இரண்டாம் முறையாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் எனக்கு இது இரண்டாவது முறையாகும்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது ட்வீட்டில், “தேர்தல் வாக்குப் பதிவின்போது கலந்துகொள்ள முடியாமல் போவது எனக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அறையில் இருந்துகொண்டே என்னால் முடிந்த கடமைகளை தேர்தலுக்காக செய்து வருவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாபுல் சுப்ரியோ சார்ந்த அசான்சோல் பகுதிக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கைப்படி, மேற்கு வங்காளத்தில் இதுவரை 81,375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,884 பேர் உயிரிழந்துள்ளனர்.







