AIIMS மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே, மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டே,…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே, மாணவர் சேர்க்கை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டே, மாணவர் சேர்க்கையை துவங்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தமிழ்நாடு அரசு தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் அதற்கான செலவினம், அலுவலர்கள் தேர்வு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமே ஏற்றுக்கொள்ளும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக இடத்தில் MBBS மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு தொடங்க கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜூலை 30ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.