எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து ஒன்றிய அரசு கூறியுள்ள நான்கு ஆலோசனைகளும் ஏற்புடையது அல்ல என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வருகை தந்தனர்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 77 இடங்களில் சித்தா, ஹோமியோபதி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், 3வது அலை குழந்தைகளை தாக்கும் என கூறப்பட்டுள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து ஒன்றிய அரசு கூறியுள்ள நான்கு வகையான ஆeலோசனைகளும் ஏற்புடையது அல்ல என தெரிவித்தார்.







