நாகை அருகே, தவறான உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாயையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்த கார்த்திக் அரவிந்துக்கும், நாகையைச் சேர்ந்த அபர்ணா என்பவருக்கும் திருமணமாகி 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்த கார்த்திக் அரவிந்த், சென்னையில் தனியாக வசித்து வருகிறார். நாகையில் குழந்தையுடன் வசித்து வந்த அபர்ணாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேசுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நெருங்கிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, தனியாக வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவன் கவித்ரன் இறந்துவிட்டதாக, சென்னையில் தங்கியிருந்த கார்த்திக் அரவிந்துக்கு தகவல் கிடைத்துள்ளது. நாகைக்கு விரைந்து வந்த கார்த்திக் அரவிந்த், தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிய போலீசார், அபர்ணாவை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது தங்களின் உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால், துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததை அபர்ணா ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அபர்ணாவையும், சுரேஷையும் போலீசார் கைது செய்தனர்.








