இந்தியா செய்திகள்

“மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை” – ப.சிதம்பரம்

“சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை” முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்!

கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர்.

“ஜூன் மாதத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 42 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. அவற்றில் 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. மீதமுள்ள 36 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதில் வரும் 13-ம் தேதிக்குள் 6 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது உண்மைதான் என்றும் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசின் மீதான தனது விமர்சனத்தை ட்விட்டரில் வாயிலாக முன்வைத்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள்தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 2,90,89,069 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23.9 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மத்திய பிரதேசத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

Saravana Kumar

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி!

Jeba

தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு!

Gayathri Venkatesan