33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

பட்ஜெட் வரலாறு: அல்வா…ப்ரீப்கேஷ்…சிவப்பு பை…பட்ஜெட் பாரம்பரியங்கள் கடந்துவந்த பாதை…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அவர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய அம்சமாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த பட்ஜெட் தாக்கலில் கால ஓட்டத்திற்கு ஏற்ப எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு சுவாரஸ்யங்களும் மறக்க முடியாத நிகழ்வுகளும் இந்திய பட்ஜெட் வரலாற்றில் அடங்கியுள்ளன.

அடுப்பங்கறையில் கடுகு டப்பாவில் பாதுகாக்கும் பணத்திற்கும் நாட்டின் கஜானாவில் வைத்துப் பாதுகாக்கப்படும் பணத்திற்கும் பரிச்சயமான ஒரு சொல் பட்ஜெட். நாடானாலும் சரி, வீடானாலும் சரி, பட்ஜெட்டிற்குள் அடங்கிய செலவினங்கள் எப்போதும் வாழ்க்கையை செழிப்பாகவே வைத்திருக்கும். பொருளாதார கட்டமைப்பின் முதுகெலும்பாக திகழும் பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்திய அரசியல் சாசனத்தில் பட்ஜெட் பற்றிய வரையறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொதுத் தேர்தல் நடத்தப்படும் ஆண்டுகளில் இடைக்கால பட்ஜெட்டையே அப்போதைய மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலில் வென்று அடுத்து அமையக் கூடிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக பட்ஜெட் என்பது இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு கலவையாக பார்க்கப்பபடுவது வழக்கம். ஆனால் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி இனிப்பை மட்டுமே பரிமாறி தொடங்கப்படுகிறது. அந்த நிகழ்வுக்கு பெயர்தான் அல்வா கிண்டும் நிகழ்ச்சி. இந்தியாவில் பட்ஜெட் தாக்கலின்போது கடைபிடிக்கப்படும் சுவாரஸ்யமான நடைமுறைகளில் இதுவும் ஒன்று. 2021ம் ஆண்டு முதல் பேப்பர் இல்லாமல், டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் டிஜிட்டல் பட்ஜெட்டைத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்யப்போகிறார். பட்ஜெட் ரகசியங்களை பாதுகாக்கும் நடைமுறையிலும் நவீன வசதிகளை பயன்படுத்தி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.  எனவே அல்வா கிண்டும் நிகழ்ச்சி, செய்திகளில் அதிகம் முக்கியத்துவம் பெறாவிட்டாலும், கடந்தகாலங்களில் இதுகுறித்த தகவல்கள் அதிகம் பேசப்படும்.  அதன்படி பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பாக பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்கும்.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நிதியமைச்சகம் இயங்கும் நார்த் பிளாக் கட்டிடத்தின் கீழ் தளத்தில்தான் இந்த நிகழ்வு நடைபெறும். எந்த செயலையும் தொடங்கும் முன்பு இனிப்புகளை பரிமாறி தொடங்கும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அல்வா கிண்டும் சடங்கு நடைபெறும். மத்திய நிதியமைச்சராக இருப்பவர் ஒரு பெரிய கிடாயில் கிண்டப்படும் அல்வாவை பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பகிர்ந்தளித்து பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணியை தொடங்கி வைப்பார். நார்த் பிளாக்கின் கீழ் தளத்தில் இதற்கென மிகப் பெரிய அச்சகம் அமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ஆவணங்களை அச்சடிக்கும் பணிகள் தொடங்கியது முதல் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் உரை நிகழ்த்தும் வரை சுமார் 2 வார காலத்திற்கு பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நார்த் பிளாக்கின் கீழ் தளத்திலேயே தங்க வைக்கப்படுவர். அவர்களுக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும் அளவிற்கு அவர்கள் அந்த வளாகத்தில் பூட்டி வைக்கப்படுவார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்று வர முடியாது.குடும்பத்தினரிடம் தொலைபேசியில்கூட தொடர்புகொள்ள முடியாது. அங்கிருக்கும் ஊழியர்களின் செல்போன்கள் அனைத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி வைத்துக்கொள்வார்கள். மிகவும் முக்கியமான உயர் அதிகாரிகள் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு சென்று வர அனுமதியுண்டு.

பட்ஜெட் தயாரிப்பு பணிக்கான தகவல் தொடர்பிற்காக ஒரே ஒரு தரைவழி தொலைபேசிக்கு மட்டுமே இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். உள் அழைப்பு மட்டுமே வரக் கூடிய அந்த தொலைபேசியில் ஊழியர்கள் உரையாடுவதும் உளவுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பிலேயே நடைபெறும். மேலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பட்ஜெட் பற்றிய ரகசியங்கள் கசியவிடப்படுவதை தவிர்ப்பதற்காக கணிப்பொறிகளின் வெளி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும். ஜாமர் போன்ற கருவிகள் பொருத்தப்பட்டு மின்னணு சாதனங்களின் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடல் நிலை சரியில்லாமல் போனால் கூட அவர் உளவுத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை நடைபெறும். பட்ஜெட் ரகசியங்களை காக்க மேற்கொள்ளப்படும் இந்த அதிரடி நடவடிக்கைகளின் நீட்சியாக நிதியமைச்சருக்குக் கூட கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது போன்ற முக்கிய தகவல்கள் அடங்கிய ப்ளூ ஷீட்களை, ஆவணங்களை அச்சிடும் பணியை பார்வையிட வரும் நிதியமைச்சர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பட்ஜெட்டுக்கு முழுப் பொறுப்பாளியான நிதியமைச்சருக்குக்கூட இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்கும் அளவிற்கு பட்ஜெட் ரகசியங்கள் காக்கப்படுகின்றன.

பட்ஜெட் ரகசியங்களை காக்க இவ்வாறு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவது ஏன்? நார்த் பிளாக்கில் உள்ள அச்சகத்திற்கு பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படுவது மாற்றப்பட்டது ஏன்? என்பதற்கு ஒரு பின்னணி உண்டு.1950ம் ஆண்டுவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அச்சகத்தில்தான் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்பட்டு வந்தன. ஆனால் அந்த ஆண்டு அச்சிடப்பட்ட சில முக்கியமான பட்ஜெட் ஆவணங்கள் முன்கூட்டியே கசிந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சம்வபத்திற்கு பின்னர் பட்ஜெட் அச்சிடும் பணி டெல்லி மின்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத்திற்கு மாற்றப்பட்டது. பட்ஜெட் ரகசியங்களை காப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் 1980ம் ஆண்டு முதல் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கும் பணி நார்த் பிளாக் கீழ் தளத்தில் உள்ள அச்சகத்திற்கு மாற்றப்பட்டது. முற்றிலும் குளிரூட்டப்பட்டு அதிநவீன அச்சு எந்திரங்கள் அங்கு அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு வருடமும் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் நடப்பு நிதி ஆண்டின் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்திலேயோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயோ தொடங்கிவிடும். மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறையில் பட்ஜெட்டிற்கென்றே தனிப் பிரிவு உள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு அமைச்சசகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அந்தந்த அமைச்சகங்கள் சார்ந்த செலவினங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும். ஒவ்வொரு துறை அதிகாரிகளும் திட்டக் குழுவுடன் ஆலோசித்துவிட்டு நிதியமைச்சகத்திற்கு விபரங்கள் அனுப்பி வைப்பார்கள். முந்தைய நிதியாண்டில் உண்மையில் எவ்வளவு செலவானது நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் குறிப்பிட்டதைவிட செலவினங்களில் எந்த அளவு மாறுதல் ஏற்பட்டது. அடுத்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் செலவினங்கள் என்ன என்று மூன்று விதமான விபரங்களை அடக்கிய அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திற்கு ஒவ்வொரு துறையினரும் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல் வருமானம் வரும் துறைகளிடமிருந்து வருவாய் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும் அதன் அடிப்படையில் நிதி அமைச்சகம் நிதி நிலை அறிக்கையை உருவாக்கும். இந்த நிதி நிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்ததும் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதியமைச்சர் தாக்கல் செய்வார். இந்த மசோதாவும் செலவுகளுக்கான நிதியைப் பெறுவதற்காக தனியாக தாக்கல் செய்யப்படும் மசோதாவும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் நிதி மசோதா ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலக்கு வரும்.  

பட்ஜெட் தாக்கலின்போது கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகள் அல்வா கிண்டும் நிகழ்வோடு நின்றுவிடவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நடைமுறைகள் சில இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தொடர்ந்து வந்தன. அதில் ஒன்று பட்ஜெட் உரை அடங்கிய காகிதங்களை தோலால் செய்யப்பட்ட பேக்கில் வைத்து நாடாளுமன்றத்திற்கு நிதியமைச்சர் கொண்டு வருவது. பட்ஜெட் தாக்கல் நாள் அன்று அந்த ப்ரீப்கேஷை கையில் தாங்கியபடி நாடாளுமன்றத்திற்கு வரும் நிதியமைச்சர் நாடாளுமன்ற வளாகத்தில் சிரித்தபடியே ஊடகங்கள் போஸ்கொடுப்பது பட்ஜெட் தாக்கல் என்றவுடன் பொதுமக்கள் நினைவுக்கு வரும் ஒரு காட்சி. அந்த ப்ரீப்கேஷ் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். ‘bougette’ என்கிற லத்தின் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் பட்ஜெட். ‘bougette’ என்பதற்கு தோல் பை என்று அர்த்தம் எனவே பட்ஜெட் என்ற வார்த்தையை சித்தரிக்கும் விதமாக தோலால் ஆன பேக்கில் நிதி நிலை அறிக்கை ஆவணங்களை இங்கிலாந்து நிதியமைச்சர்கள் கொண்டு வருவது வழக்கம். அந்நாட்டவர்கள் இந்தியாவை ஆண்டபோது இந்தியாவிலும் இந்த பழக்கத்தை தொடங்கி வைக்க அவை தற்போதும் தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த நடைமுறைக்கு பாஜக ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வென்று மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமைந்த பின்னர் ஜூலை மாதம் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்திற்கு வந்தபோது அவரது கையில் ப்ரீப்கேஷ் இல்லை. அதற்கு பதிலாக சிவப்பு நிற உறை இருந்தது. பட்ஜெட் தொடர்பான கோப்புகளை அதில் வைத்து நிர்மலா சீதராமன் கொண்டு வந்தார். ஆங்கிலேயே ஆட்சிகாலத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நமது சொந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவே இவ்வாறு செய்யப்பட்டதாகவும், மேலும் பிரீப்கேஷ்க்கு பதில் பையை கொண்டு வருவது தமக்கு எளிதாக உள்ளதாகவும் அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். இதுமட்டுமல்ல ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து தொடர்ந்து வந்த மேலும் சில நடைமுறைகளையும் பாஜக ஆட்சி மாற்றி அமைத்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் வழக்கமாக மாலை 5 மணிக்குதான் தொடங்கும். இந்த வழக்கம் 1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றபோது மாற்றியமைக்கப்பட்டது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கலை தொடங்கினார். பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யபட்டு வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின்போது இந்த நடைமுறையும் மாற்றப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லி 2017ம் ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்து புதிய பாரம்பரியத்தை தொடங்கிவைத்தார்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading