ஒடிசாவை நெருங்கும் அக்வான் புயல்!
வங்கக் கடலின் மத்திய மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் ‘அக்வான்’, நவம்பர் 19 – வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே சுமார் 580 கி.மீ. தொலைவிலும், பூரிக்கு தெற்கே சுமார் 640 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபூர் மற்றும் ஒடிசாவின் பூரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலின் வேகம் மற்றும் நகரும் திசை தொடர்ந்து மாறி வருவதால், அதன் பயணப் பாதை மற்றும் தாக்கம் குறித்து நவம்பர் 19 – வியாழக்கிழமை தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபூருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 570 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டிருந்தது.

11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், ஒடிசாவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகள், கடலோர மாவட்டங்களில் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை மற்றும் நவம்பர் 21 – சனிக்கிழமைகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புயல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மழையால் கஜபதி, கஞ்சம், பூரி, குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், நயாகர், கட்டாக், ஜாஜ்பூர், தேன்கனல், கேயோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதில், கஞ்சம், மல்கான்கிரி, ராயகடா, கோராபுட் மற்றும் கலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பைச் சந்திக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் 11 மாவட்டங்களுக்கு மாநில அரசு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 46,701 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 448 புயல் பாதுகாப்பு மையங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடுதலாக 3,000 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் (ODRAF) 60 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 14 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை.. தேர்வுகளும் ஒத்திவைப்பு!
இதற்கிடையே, ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தலைமையில் நவம்பர் 18 – புதன்கிழமை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கைப் பணிகளை ஒருங்கிணைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள கஞ்சம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே தலா ரூ.1 கோடி நிதியுதவியும் மாநில அரசு வழங்கியுள்ளது. புயல் அச்சுறுத்தல் காரணமாக 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நவம்பர் 19 – வியாழன் மற்றும் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், மாநிலத் தேர்வு வாரியம் (SSB) நடத்தவிருந்த ஆட்சேர்ப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை முதல் நவம்பர் 22 – ஞாயிற்றுக்கிழமை வரை ஆறுகளின் நீர்மட்டம் மற்றும் வெள்ள அபாயத்தைக் கண்காணிக்க நீர்வளத் துறையைச் சேர்ந்த நான்கு மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




