சாகர்மாலா என்ற திட்டத்தின் கீழ் மீனவர்களை கடற்கரையில் இருந்து வெளியேற்றிவிட்டு, அதனை கார்ப்பரேட் நிறுவனத்திடம் கொடுக்க திட்டமிட்டு வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை ஆதரித்து திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ராமேஸ்வரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசும்போது, மதுரைக்கு 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்தது அதிமுகவின் சாதனை என சொல்லிக் கொண்டு உள்ளார்கள். நான் அங்கு சென்று பார்த்தப்போது மிகப் பிரம்மாண்ட சுற்று சுவர் மட்டுமே இருந்தது. ஆனால் உள்ளே சென்று பார்த்தால் ஒற்றை செங்கல் மட்டும்தான் இருந்தது. அதையும் எடுத்து வந்து விட்டேன். தற்பொழுது அவர்கள் மருத்துவமனையை காணவில்லை என கடந்த 2 தினங்களாக தேடிக் கொண்டுள்ளனர் என செங்கலை எடுத்து மக்களிடம் காட்டினார்.
இதனையடுத்து மேலும் பேசுகையில் சாகர்மாலா என்ற திட்டத்தினை கொண்டுவந்து மீனவர்களை கடற்கரையில் இருந்து வெளியேற்றி விட்டு, கடற்கரையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்க உள்ளனர். அதை தொடர்ந்து எதிர்ப்பவர் ஸ்டாலின் மட்டுமே என தெரிவித்தார். மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண நிதி ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் நடக்க வேண்டும் என்றால் வருகின்ற 6-ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அழுத்தும் பட்டன் மோடிக்கும், பழனிச்சாமிக்கும் தலையில் கொட்டும் கொட்டாக இருக்கும் என தெரிவித்தார்.







