வரும் 14ந்தேதி தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏம், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மூத்த அமைச்சர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வரும் 14ந்தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வரும் 14ந்தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவியேற்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு இளைஞர் நலன்-விளையாட்டுத்துறை, உள்ளாட்சித்துறை போன்ற இலகாக்களில் ஒன்று வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
45 வயதான உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் இளம் வயதில் அமைச்சர் பொறுப்பேற்றவர்களில் ஒருவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் வரும் 14ந்தேதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூஸ்7 தமிழ் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.







