உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் இறுதி சடங்கில் தமிழகத்தின் சார்பில் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
உத்தரபிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இவர் உத்தரபிரதேசத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 8.16 மணியளவில் முலாயம் சிங் யாதவ் காலமானார்.
இதைத்தொடர்ந்து ஏராளமான அரசியல் கட்சித்தலைவர்கள், சமாஜ்வாதி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்துக்கு உட்பட்ட சைபாய் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அகிலேஷ் யாதவை சந்தித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.







