அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள் காரணமாக அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது, ஆழப்புழை. பதற்றம் நீடிப்பதால் அங்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.ஷான். எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கட்சியின் மாநில செயலாளரான இவர், வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (சனிக்கிழமை) மாலை தனது இருசக்கர வாகனத்தில் மன்னன்சேரி சந்திப்பில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தைப் பின் தொடர்ந்து காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவர் மீது வேண்டும் என்றே மோதியது.
நிலை தடுமாறி கீழே விழுந்த ஷான் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு ஓடியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆழப்புழை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து கொச்சி மருத்துவ மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். 12.45 மணிக்கு அவர் இறந்து விட்டதாக தகவல் வெளியானது. அவர் உடலில் 40 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு கும்பல், பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு சென்று கதவை உடைத்துள்ளது. பிறகு உள்ளே நுழைந்த கும்பல், ரஞ்சித்தை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது. உடனடியாக ஆழப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரஞ்சித் ஸ்ரீனிவாசனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழிக்குப் பழியாக நடந்த இந்த கொலை சம்பவங்கள் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. கொல்லப்பட்டவர்கள் எதிரெதிர் அரசியல் கட்சியைச் சேர்ந்த மாநில தலைவர் கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள் ளனர்.
இந்நிலையில் ஆழப்புழை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இந்த தடை நீடிக்கும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள் ளார்.








