சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற மத்திய அரசு உத்தரவிடும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்ற உத்தரவிடுவதில் இந்திய அரசு அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக ட்விட்டர் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு அரசின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.
பதிவுகளை அகற்ற உத்தரவிடும் அதிகாரிகள், 2021 ஐடி விதிகளை சுட்டிக்காட்டி உத்தரவிடுவதாகவும், அவர்கள் அகற்றக் கோரும் பதிவுகளில் பல பதிவுகள் அகற்றுவதற்குத் தேவையற்றவை என்றும் தெரிவித்துள்ள ட்விட்டர், இது தொடர்பாக தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ட்விட்டர் நிறுவனம் 2021 ஐடி விதிகளுக்கு உட்பட்டு செயல்படத் தவறிவிட்டது என்றும், ஜூலை 4ம் தேதிக்குள் விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்றும் ட்விட்டர் நிறுவனத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்திருந்தது.
மேலும், அரசின் வழிகாட்டுதல்கள் தொடர்ந்து மீறப்படுமானால்,
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்திருந்தது.
பதிவுகள் விவகாரத்தில் உரிய கண்காணிப்பை தங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும், கடந்த ஏப்ரல் 26 முதல் மே 25 வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் வழிகாட்டு நெறிகளை மீறிய 46 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், மத்திய அரசு சமூக ஊடகங்கள் வெளிப்படைத் தன்மை, பாதுகாப்பு, நம்பிக்கை, பதில் சொல்லும் பொறுப்பு ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த எச்சரிக்கையை அடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தின் தலையீடை கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவன கணக்கு விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு இந்தியா 3வது மிகப் பெரிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.









