தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் வானதி ஸ்ரீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘உதயநிதிக்கு அமைச்சர் பதவி காத்திருப்பதைப் போல இங்கே ஒரு ஷிண்டே புறப்படுவார்.
2024-ல் தமிழகத்தில் நிச்சயம் 25 எம்.பி.க்களை பாஜக உருவாக்கும். 25 எம்.பிக்களை நாம் உருவாக்கினால் தான் 180 சட்டமன்ற உறுப்பினர் பெற்று 2026-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஜனவரி 1-ஆம் தேதி பாதயாத்திரை துவங்கி டிசம்பர் 31-ஆம் தேதி கோபாலபுரம் பகுதியில் பாதயாத்திரை முடிவடையும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு வருடம் குடும்பம் சம்பாத்தியம் அனைத்தையும் விட்டுவிட்டு பாதயாத்திரையில் பா.ஜ.க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து மாதம் அதற்காகத் தயாராகுங்கள்’ என அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்தது எனவும் தேர்தல் வாக்குறுதியில் எழுத்துப்பூர்வமாக பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்போம் என்று சொல்லிய திமுக, அதைச் செய்யவில்லை இதைக் கேட்பது எதிர்க்கட்சியான எங்களின் கடமை என்று கூறிய அவர், பள்ளிக்கல்வித்துறையில் 3.25 லட்சம் காலியிடங்கள் உள்ளதாகவும் , 2013-ல் TET தேர்ச்சி பெற்று தற்காலிக ஆசிரியராக 9 ஆண்டுகளாக பணியாற்றிவருவோருக்கு வாய்ப்பு தராமல் புதிதாக வேலைக்கு எடுக்கின்றனர் ஏன்? எனக் கேள்வி எழுப்பிய அவர் பணம் சம்பாதிக்கவே எனக் குற்றம்சாட்டினார்.








