தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் தவெக 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. இந்த நிலையில் தவெகவின் பலம் 118-ஆக உயர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக IUML-லும் நிபந்தனையற்ற ஆதரவை தவெகவிற்கு தெரிவித்துள்ளது. இதனால் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்..
அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு ஆளுநர், தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில், தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். மேலும் வரும் 13ம் தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.







