சிவகங்கை சூரக்குளம் பொன்னாம்பட்டியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் நவீன், ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பார் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அசைவு இருந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்ததில், நவீன் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சாலையின் குண்டும் குழியுமான நிலை காரணமாக உடலில் அசைவு ஏற்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த குழந்தை ராணி, உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததைத் தொடர்ந்து உடல் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், முன்விரோதம் காரணமாக நவீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் டி.புதூரைச் சேர்ந்த மதன்ராஜ் மற்றும் சிவகங்கை போஸ் ரோட்டைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.




