தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு அதிரவைக்கும் உண்மைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வரம்பு மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்பட்டிருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸ்காரர்கள் 3 தாசில்தார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








