டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று இன்று தொடங்கியது. முதல் போட்டி நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இன்றைய 2வது ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கனிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கயது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஸ்ரதுல்லா ஷசாய் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹ்மனுல்ல குர்பாஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய இப்ரகிம் ஜத்ரான் மற்றும் உஸ்மான் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து தலா 32 மற்றும் 30 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக சாம் கரன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால், அந்த அணி 19.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ஜாஸ் பட்லர் களமிறங்கி 18 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ரன்கள் எடுத்தார். அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 29 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.








