துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.
துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து விட்டது.
அண்மைச் செய்தி: கானா நாட்டின் வர்த்தக ஆணையராக பொறுப்பேற்ற மேலூர் தொழிலதிபர்
மீட்பு பணிகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த 42 வயதுடையவரை 222 மணி நேரத்துக்கு பிறகு மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மீட்பு பணிகள் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அவ்வளவு வேகமாக நடைபெறவில்லை. ஆனால் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆரம்ப கால தொய்வுக்கு காரணம் எங்கள் நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய நிலநடுக்கத்தை நாங்கள் எதிர்கொண்டதில்லை. மனித இனமே இப்படி ஒரு நிலநடுக்கத்தை எதிர்கொண்டிருக்காது என்று தெரிவித்தார்.
இதனிடையே உலக சுகாதார மையம் துருக்கி நிலநடுக்கத்தை இந்த நூற்றாண்டின் ‘மிக மோசமான இயற்கை பேரிடர்’ என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.







