துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய பேரிடர் மீட்பு குழு 6 வயது சிறுமியை 80 மணி நேரம் போராடி மீட்டது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் இரவில் 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின.
துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்தை -ஐ கடந்து விட்டது. துருக்கியில் மட்டும் உயிரிழப்பு 32,000 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,500 தாண்டியுள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதுவரை நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையும் படியுங்கள்: நிலைகுலையும் துருக்கி: காஹ்ராமன் நகரில் மீண்டும் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும் வண்ணம் இந்த அவசர கால நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு “ஆபரேசன் தோஸ்த்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என ஐநா தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்கான ஐநா மன்றத்தின் தலைமை அதிகாரி மார்ட்டின் கிரிஃபித் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட வாய்ப்புள்ளது என கணித்துள்ளார். தெற்கு துருக்கியில் அவர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். துருக்கிய அரசு கட்டடங்களை கட்டிய 113 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு குழு (NDRF) துருக்கியின் காஜியன் பகுதியில் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற மீட்பு பணியில் 80 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கித் தவித்த 6 வயது சிறுமியை மீட்டுள்ளனர். 18 வீரர்களை கொண்ட குழு இந்த சிறுமியை மீட்டுள்ளது. மேலும் 150 வீரர்கள் மற்றும் 4 மோப்ப நாய்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் கமாண்டர் குர்மிந்தர் சிங் தெரிவித்ததாவது..
“6 வயது சிறுமியை கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த மீட்பு பணிக்கு 80 மணி நேரம் செய்து முடிக்க 80 மணி நேரம் ஆனது. இந்த பகுதியில் எங்களது குழு வந்து இறங்கியது முதலே மீட்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த சிறுமியை காப்பாற்றியதன் மூலம் அதிசயம் நிகழ்ந்ததற்கு நாங்கள் சாட்சியாக மாறியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
– யாழன்







