தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அழைப்பில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி இருவரும் கூட்டாக போராட்டம் நடத்தியுள்ளனர். அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்?விரிவாக பார்க்கலாம்….
அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அக்கட்சியினரால் அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் பல்வேறு எதிர்பாராத அரசியல் நிகழ்வுகள் அதிமுக-வில் நடந்துள்ளன. அதிமுகவின் சக்தி மைய்யமாக இருந்த சசிகலா, தனி செல்வாக்கு பெற்றிருந்த டிடிவி தினகரன் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் தற்போது அதிமுகவில் இல்லை. அவர்களை நீக்கி விட்டோம் என்கிறார்கள். இதையடுத்து, அதிமுகவின் வாக்கு வங்கி 4 ஆக சிதறிக்கிடக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால், வரும் மக்களவைத் தேர்தலுக்குள் அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என்கிறார் வி.கே.சசிகலா.
பெரும்பான்மை நிர்வாகிகள் ஆதரவுடன் அதிமுகவின் பொதுச் செயலாளராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ’’அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. வெற்றிடமே இல்லை என்று நிருபித்துள்ளோம். ஒரு சிலர் மட்டுமே விலகியுள்ளனர். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவர் தவிர யார் வேண்டுமானாலும் மீண்டும் கட்சிக்கு வரலாம்’’ என்கிறார்.
மேலும், ‘’ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் உள்ளார். அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 90 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகவும்’’ சொல்கிறார்கள். ’’கட்சி யாருக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை. உண்மையான அதிமுக நாங்கதான். சட்டப்போராட்டம் தொடர்கிறது’’என்று சசிகலா, ஒபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே ‘அதிமுகவை மீட்டெடுப்போம்’ என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற தனி இயக்கம் கண்டு, தேர்தல்களையும் தனித்து சந்தித்து வருகிறார் டிடிவி தினகரன்.
NDA கூட்டத்தில் அழைப்பும் தவிர்ப்பும்
சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரன் மூவரும் மத்தியில் ஆளும் பாஜக-வை ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்கின்றனர். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்றும் சொல்லியும் வருகின்றனர். இந்நிலையில், கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பது, பழைய கூட்டாளிகளை தேடி அழைப்பது என தேர்தல பணிகளை தேசிய கட்சிகள் தொடங்கி விட்டன குறிப்பாக ஜூலை 18ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 38 கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பிரதமருக்கு தென்னிந்திய பிரதிநிதியாக இபிஎஸ் மரியாதையும் செய்தார். ஆனால், தனிக் கட்சி நடத்தும் டிடிவி தினகரன், தனி அணியாக உள்ள ஒபிஎஸ் இருவருக்கும் டெல்லி கூட்டத்திற்கு அழைப்பில்லை. அதைத் தொடர்ந்து நடைபயண தொடக்க விழாவிற்கும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். இது இருதரப்பையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பாஜகவை பெரிதும் எதிர்பார்த்துள்ளது. டெல்லி மேலிடத்தைப் பொருத்தவரை அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் கிடைத்தால்தான் வெற்றி வாய்ப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒபிஎஸ், டிடிவியுடன் பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு என்கிற ரீதியில் கூட்டணிக்குள் ஒரு உள்ஒதுக்கீடு என்பதையும் இபிஎஸ் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிரிவுகள், பிளவுகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ஆதரவை இழக்க பாஜகவும் விரும்பவில்லை என்கிறார்கள்.
இதையடுத்து, ‘தங்களைத் தவிர்க்கும் இபிஎஸ்-க்கும் பாடம் கற்பிக்க வேண்டும். பாஜக-வையும் பகைத்துக் கொள்ளாமல், செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்று டிடிவி தினகரன், ஒபிஎஸ் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இருவரும் இணைந்து மக்களவைத் தேர்தலையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடாமல், மற்ற தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம். இதன் சாதகம், பாதகம் என்ன? என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். அதாவது அதிமுக, திமுகவை எதிர்த்து களமிறங்க தயாராகிவிட்டனர். இதன்படி, 20க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி என்பதை நிருபிப்போம்’ என்கிறார்கள் அமமுக மூத்த தலைவர்கள். தங்களோடு ஒத்துப் போகும் கட்சிகளோடு கூட்டணி அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே புள்ளியில்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்திற்கு அழைக்கப்படாதது குறித்தும், கூட்டணியில் இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘’அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை பாஜக கூட்டணியில் தொடருவோம்’’ என்று ஒபிஎஸ் தெரிவித்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ’’நாங்கள் இருவரும் சுயலத்திற்காக இணையவில்லை. துரோகிகள் கையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்பதற்காக இணைந்துள்ளோம்’’ என்று டிடிவி தினகரன் பேசியுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். தங்களது பொது எதிரி திமுக, இபிஎஸ் என்கிற வகையில் இருவரின் தேர்தல் வியூகமும் இருக்கும் என்கிறார்கள். இது குறித்து வரும் 6ம் தேதி நடைபெறும் அமமுக பொதுக்குழு கூட்டத்திலும் நிர்வாகிகள் விவாதிக்க உள்ளனர். இதையடுத்து முக்கிய அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.
தனி ரூட்டில் பயணித்து சாதிப்பார்களாக ஒபிஎஸ், டிடிவி தினகரன்? இருவரின் தனி அணியால் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் ? தேர்தலுக்கு முன்பாக அணிகளை ஒருங்கிணைத்து விடுவாரா சசிகலா? – பொருத்திருந்து பார்க்கலாம்…
– ஜோ மகேஸ்வரன்
இது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் விரிவான காணொளியைக் காண…









