பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை தனது அதிவேக பைக்கில் அமர வைத்து டிடிஎப் வாசன் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
பைக்குகளில் இளைஞர்கள் சாகசம், வீலிங் செய்வது வீடியோக்களாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் சென்னை அண்ணாசாலையில் 4 இளைஞர்கள் பைக் வீலிங் செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் தனது விலை உயர்ந்த பைக்கில் அதிவேகமாக செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இவர் கிட்டத்தட்ட 152 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டுவதும், இவருக்கு பின்னால் அமர்ந்துள்ள மற்றொரு யூடியூபரான ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறுவது போன்றும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
அதில் தனது பைக்கை ஓட்டும் டிடிஎப் வாசன் வேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறார். பின்னால் அமர்ந்திருக்கும் ஜி.பி.முத்துவோ “ஐயோ 100, 110, 120 ஐயையோ நிறுத்துங்க. 80-ல போங்க”னு அலறுகிறார். உடனே வேகத்தை குறைக்கும் வாசன் மீண்டும் பைக் வேகத்தை கூட்டி கிட்டத்தட்ட 145 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறார். இதனால் ஜி.பி.முத்து அலறுவதை பார்த்ததும், பைக் ஓட்டுற வாசனோ சந்தோசமாக சிரிக்கிறார்.
நான் மட்டும் லடாக்கிற்கு தனியா போகலாம்னு நினச்சேன். இப்போ நீங்களும் சேர்ந்து வாங்க” அப்படீன்னு வாசன் சொல்ல. ஜிபி முத்துவோ, “தம்பி வண்டி வேகமா ஓட்டுறார். என்னோட ஈரக்கொலை நடுங்குது. கீழே இருக்குறது எல்லாம் மேல வருது” என கூறிக் கொண்டிருக்கும்போதே வாசன் தன் கையை விட்டு பைக்-ஐ ஓட்டுகிறார். உடனே ஜி.பி.முத்துவோ, “ஐயோ கையை விட்டுவிடாதீர்கள் . எதிரில் லாரி வருது” என அலறிய பிறகுதான் வாசன் பைக்-ஐ மீண்டும் கையில் பிடிக்கிறார். மீண்டும் அதிவேகத்தில் பைக்-ஐ ஓட்டுவதும், ஜி.பி.முத்து அலறும் வீடீயோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.
இதைப் பார்க்கும் இளைஞர்களும் இதே பாணியை கடைபிடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இந்த வீடியோ காட்சிகளை யூடியூபில் இருந்து நீக்குவதுடன் இதுபோன்ற வீடியோ வெளியிடுபவர்கள் மீதும் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர தவறான செயல்களை பிரபலங்கள் ஊக்குவிப்பதைப்போல நடந்து கொள்ளக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.









