திமுக கூட்டணியை முறிக்க முயற்சி? – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

மின்கட்டணம் தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணியை முறிக்க முயற்சி செய்ய ஒரு கூட்டமே இருப்பதாக முரசொலியில் அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மின்கட்டணம் தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணியை முறிக்க முயற்சி செய்ய ஒரு கூட்டமே இருப்பதாக முரசொலியில் அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே பாலகிருஷ்ணனின் மின்கட்டணம் தொடர்பான அறிக்கை குறித்து திமுக நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், திமுக கூட்டணியை முறித்துவிட முயற்சி? நடப்பதாகவும், கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்றும் தெரிவித்துள்ளது.

 

ஒன்றிய பி.ஜே.பி. அரசு போல “crush the poor, nourish the rich” அதாவது ஏழைகளை நசுக்கி, பணம் படைத்தோரை போஷிக்கும் வரி விதிப்புக் கொள்கையல்ல தி.மு.க என்றும், அரசுக்கு அரசியல் நடப்புகளை பல ஆண்டு காலங்களாக கூர்ந்து கவனித்திடும் தோழர் பாலகிருஷ்ணன் இதை எல்லாம் நிச்சயம் உணர்வார் என்றும் தெரிவித்துள்ளது.

நாம் விடும் அறிக்கை பூமராங் போல பல நேரங்களில் நம்மை நோக்கித் திரும்பி விடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை. தி.மு.க. கூட்டணிக் கட்சியாயிற்றே இந்த மின்கட்டண உயர்வால் அந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தோழர் பாலகிருஷ்ணன் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். ஆனால், கட்சிக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே ‘சிண்டு முடிந்து’, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல.

 

பேனைப் பெருமாளாக்கி அதனை பெத்த பெருமாளாக்கிடு வதில் வல்லமை வாய்ந்த கூட்டம் அது. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்? ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம் என முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.