ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை வலியுறுத்துவதும், மீன்வளத் துறையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
கடலில் நிலவும் இயற்கைச் சவால்களை எதிர்கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் முக்கியப் பங்காற்றி வரும் மீனவ மக்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மீனவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
டிடிவி தினகரன் வாழ்த்து!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இயற்கை தரும் பெரும் சவால்களை எதிர்கொண்டு, தங்களின் கடின உழைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உணவுப் பாதுகாப்பிற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் மீனவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலையும் கரையையும் மட்டுமே நம்பியிருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், உரிமைகள் உறுதி செய்யப்படவும், கடலில் பாதுகாப்பான மீன்பிடிச் சூழல் உருவாகவும், மீனவ சமுதாயக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் அரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த உலக மீனவர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பாலும், அயராத அர்ப்பணிப்பாலும் கடல்சார் வளங்களைப் பாதுகாத்து, மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் மீனவச் சொந்தங்களின் சேவை போற்றுதலுக்குரியது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், பாதுகாப்பான மீன்பிடித் தொழிலை உறுதி செய்வதும் நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் வாழ்க்கையில் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் பாதுகாப்பாகக் கரை திரும்பிடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இனிய உலக மீனவர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் வாழ்த்து!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் உலக மீனவர் தின நல்வாழ்த்துகள்! அவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.





