அமெரிக்க வாக்காளர் தகுதி பாதுகாப்பு (SAVE) என்ற அமெரிக்கா சட்டத்திற்கான தனது வலியுறுத்தலைப் புதுப்பிக்க, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியாவின் தேர்தல் முறையை மேற்கோள் காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் தேர்தல்களை எப்படி நடத்த முடியும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமெரிக்க நிர்வாகத்திடம் கேட்டதை நினைவு கூர்ந்த டிரம்ப், நாட்டில் “தேர்தல் மோசடியைக்” கட்டுப்படுத்த ஒவ்வொரு அமெரிக்க வாக்காளருக்கும் புகைப்பட அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டதாவது, “இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எங்கள் நிர்வாகத்திடம், ‘செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்?’ என்று கேட்டார். இந்தியாவின் கடந்த தேர்தலில் 646,000,000 வாக்காளர்கள் வாக்களித்தனர்! 1%க்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர், மேலும் ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தைக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நாம் ‘அமெரிக்காவைக் காப்பாற்றும் சட்டத்தை’ இப்போதே நிறைவேற்ற வேண்டும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




