நாங்குநேரி வானமாலை பெருமாள் கோயிலில் பங்குனி விழாவை முன்னிட்டு திருவீதி உலா

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாலை பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பெருமாள் தங்கச் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாலை பெருமாள்…

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாலை பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பெருமாள் தங்கச் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாலை பெருமாள் திருக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு பெற்ற தலமாகும். பிரசித்தப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டத்திருவிழாவும், சித்திரை மாதம் பெரிய மரத் தேரோட்டமும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 26-ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினசரி பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர். 7-ம் திருநாளான இன்று தங்கச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணெய்காப்பும் நடைபெற்றது. தொடர்ந்து நாங்குநேரி மற்றும் ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தங்கச் சப்பரத்தில் காட்சி அளித்த பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனைகளும் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவில் கண்ணாடி சப்பரத்தில் பெருமாள் திருவீலா உலா வந்தார். விழாவின் 10-ம் திருநாளான வருகிற 4-ம் தேதி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.

-அனகா காளமேகன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.