வெயிலின் தாக்கத்தால் சம்பங்கி பூக்களின் வரத்து குறைந்து, மலர்ச் சந்தைகளில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செங்கட்டான்பட்டி, செம்பட்டி, நடுப்பட்டி, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சம்பங்கிப் பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சொட்டுநீர் பாசனம் மற்றும் சுழர் தண்ணீர் தெளிப்பான்கள் மூலமாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு, பூக்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் கொடைரோடு பகுதிகளில், கடந்த வாரம் வரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 70 முதல் 80 வரை விற்பனையான பூக்கள், இந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 250 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் அதிகளவில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் வாசனை திரவிய மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையினர் இம்மலர்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பூக்களின் வரத்து குறைந்து விட்டதாகவும், எனவே பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தனர். மேலும், இந்த விலை உயர்வால், பெரிய லாபம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர்.
– சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: