திருச்சி; தந்தை, மகனை கத்தியால் குத்தி ரூ.52 லட்சம் கொள்ளை

தந்தை, மகன் இருவரையும் கத்தியால் குத்தி 52 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த 55 வயதான தங்கராஜ் மற்றும் அவரது மகன் 25 வயதான…

தந்தை, மகன் இருவரையும் கத்தியால் குத்தி 52 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த 55 வயதான தங்கராஜ் மற்றும் அவரது மகன் 25 வயதான யுவராஜ் ஆகிய இருவரும் உதகையில் கேரட் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் வாரத்திற்கு ஒரு முறை கொள்முதல் செய்த பணத்தை உதகையில் உள்ள ஏற்றுமதியாளர்களிடம் வழங்க உதகைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல் நேற்று திருச்சியில் இருந்து தந்தை, மகன் இருவரும் பேருந்தில் உதகைக்கு சென்றுள்ளனர். இவர்களை மூன்று பேர் கொண்ட கொள்ளை கும்பல் பின் தொடர்ந்துள்ளது. மற்றொரு கொள்ளை கும்பல் காரிலும் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலை உதகை வந்தடைந்த தந்தை, மகன் இருவரையும் உதகை மணி கூண்டு அருகே சென்று கொண்டிருக்கும்போது இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அவர்களிடம் இருந்த ரூபாய் 52 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் கூச்சலிட்டதில் அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதகை நகர காவல் துறையினர் பலத்த காயமடைந்த தந்தை, மகன் ஆகிய இருவரையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் ஒரு மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.