உதகை அருகே நான்கு வயது சிறுமியை வனவிலங்கு தாக்கிக் கொன்ற சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமையை தாக்கிக் கொன்ற வனவிலங்கு புலியா அல்லது சிறுத்தையா என வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மைனலா அரக்காடு பகுதியைச் சேர்ந்த கிஷாந்த் என்பவரது மகள் சரிதா. 4 வயது சிறுமியான இவர் தேயிலைத் தோட்டம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வனப் பகுதியில் இருந்து வெளியேறிய வனவிலங்கு ஒன்று தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தாக்கி வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனை கண்ட அப்பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு
ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வனவிலங்கு தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத் துறையினர்
கிராமப் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு கேமரா உதவியுடன், வன விலங்குகளின்
காலடி தடயங்களைக் கொண்டு சிறுமியைத் தாக்கியது புலியா அல்லது சிறுத்தையா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனவிலங்கு நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சிறுமி தாக்கி கொல்லப்பட்ட இடத்தில் தனியாக யாரும் செல்லக் கூடாது என
வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுமியைத் தாக்கிய வனவிலங்கை கண்டறிய 20 பேர் கொண்ட குழு அமைத்து வனத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
-ம.பவித்ரா








