பழைய பொருட்களை விலை கொடுத்து விலைக்கு வாங்கும் பணியில் திருச்சி மாநகராட்சி இறங்கியுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர் சுய உதவி குழு மூலம் நேரடியாக வீடு வீடாக சென்று சேகரித்து ஒவ்வொரு கிலோ பழைய பொருட்களுக்கும் 12 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்பட்டு வீட்டில் உரிமையாளர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தேவையற்ற பொருட்களை வீடுகளில் சேர்ப்பதால் அதில் தேங்கும் தண்ணீரால் டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. இவற்றை தவிர்க்கவும், பெண்கள் சுய உதவிகளுக்கு உதவும் விதமாகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மேயர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தூய்மையான மாநகராட்சி, திருச்சி மாநகராட்சி என்ற நிலை உருவாகும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.







