சிபிஐ சோதனை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் வீடு உள்பட நாடு முழுவதும் 7 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள் என கேள்வி எழுப்பி இருந்த கார்த்தி சிதம்பரம், இது ரெக்கார்டு சாதனை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை முதல் சென்னையிலுள்ள எனது வீடு, டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் ஒரு முதல் தகவல் அறிக்கையை மேற்கோள் காட்டி சோதனை நடத்தி வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “முதல் தகவல் அறிக்கையில் என்னுடைய பெயர் இல்லாத நிலையிலும் தொடர்ச்சியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது வரை எவ்விதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. தேடலின் நேரம் சுவாரஸ்யமானது என்பதை நான் சுட்டிக்காட்டலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.







