முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசின் முயற்சியால் நரிக்குறவர் சமூகத்தினருக்குப் பழங்குடியினர் தகுதி-முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாகப் பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விளிம்பு நிலையில்  அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவ மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் மத்திய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் “நரிக்குறவர் உள்ளிட்ட மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்” என்று சொல்லியிருந்தோம்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த 19.3.2022 அன்று பிரதமர் அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன்.

அதில் “1965-இல் லோகூர் குழுவும்” “1967-இல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவும்”, பிறகு தமிழ்நாடு அரசும், “2013-இல் மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டிருந்ததையும்” சுட்டிக்காட்டி, “விரைவில் குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர் மக்களுக்கு” பழங்குடியினர் தகுதி அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

இதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாகக் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் முயற்சிகளின் விளைவாக கழகத்தின் முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெறுகின்ற இந்த வேளையில்  இந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்காகவும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்காகவும் நடத்தி வந்த போராட்டத்திற்கு இப்போது வெற்றி மாலை கிடைத்திருக்கிறது. சமூகநீதி வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் நிகழ்த்தியுள்ள சாதனை இது!

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியின தகுதி மட்டுமின்றி  எனது தலைமையிலான அரசு அமைந்த பிறகு அவர்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அவர்களின் வாழ்விடங்களுக்குப் பட்டா வழங்குவது, அடிப்படை வசதிகள் வழங்குவது, தொழில் துவங்க உதவுவது என ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நானே அவர்கள் வசிக்கும் பூஞ்சேரி கிராமத்திற்குச் சென்று அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மட்டுமின்றி குடும்ப அட்டை போன்ற அடிப்படை உரிமைகளை அளித்து அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கான உத்தரவாத திட்டத்தைத் துவக்கி வைத்து, 4.53 கோடி ரூபாய்க்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

சமூகநீதிக்காக  சமுதாயத்தை கை தூக்கி நிறுத்துவதற்காக அடுத்தடுத்து பொருளாதார உதவி நடவடிக்கைகளைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு எடுத்து வருகின்ற நேரத்தில்  அவர்களுக்குப் பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை  நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும்.

நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக  அவர்களின் வாழ்வினை ஒளிமயமாக்க எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொதுச்செயலாளர் என்பவர் யார்? அவருக்கான பணிகள் என்ன?

Web Editor

’உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்…’: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நன்றி

Halley Karthik

பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

Halley Karthik