ட்ரெண்டிங்கில் விஜய் ஆண்டனி பட பாடல்

விஜய் ஆண்டனி – ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இசையமைப்பாளராக தன் திரையுலக பயணத்தைத் தொடங்கியவர் விஜய் ஆண்டனி. இவர்…

விஜய் ஆண்டனி – ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இசையமைப்பாளராக தன் திரையுலக பயணத்தைத் தொடங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைக்கும் பல பாடல்கள் ஹிட் அடிப்பது வழக்கம். 2008ஆம் ஆண்டு வெளிவந்த ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாக்க முக்க’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது; விருதுகளையும் அள்ளிக் குவித்தது. டைலாமோ டைலாமோ, மக்காயேலா மக்காயேலா, சில்லாக்ஸ் , போன்ற புதுமையான வார்த்தைகளால் இவர் இயற்றும் பாடல்கள் இளைஞர்களைக் கவர என்றுமே தவறியதில்லை.

2012ஆம் ஆண்டு வெளியான ’நான்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதைக்களமும், சமூகக் கருத்தும் கொண்ட இவரது திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’, அம்மா செண்டிமெண்ட் திரைப்படமாக பாராட்டைப் பெற்றது.

தற்போது விஜய் ஆண்டனி -ரித்திகா சிங் நடிப்பில், கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் ‘கொலை’. பாலாஜி குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடலான ’நீர்க்குமிழோ’ நேற்று வெளியானது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில், கார்த்திக் நேத்தா வரிகளில், சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியுள்ள இப்பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

–  ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.