திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது…

வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெளியாகியிருக்கும் தீர்ப்புகளின்படி திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். அதில் 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இவரது வெற்றி பல திருநங்கைகளுக்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் கங்காவின் வெற்றியை அப்பகுதி மக்களும் சக திருநங்கைகளும் பாராட்டுத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி முன்னதாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு 2-வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவர் இந்தியாவின் முதல் திருநங்கை கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.