சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணும் பணி இன்று (23.02.2022)நடைபெற்று வருகிறது. இதில், தலைநகர் சென்னை மாநகாரட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. திமுகவில் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்படி திமுக வாய்ப்பு வழங்கியுள்ளதில், விருகம்பாக்கம் 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் 22 வயதே ஆன இளம் பெண் ’நிலவரசி’ அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார். வாக்கு சேகரிப்பின்போது, ”எனக்கு அரசியல் ரோல் மாடல் அண்ணன், உதயநிதி ஸ்டாலின்தான். இன்றைய அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமான தேவையாக உள்ளது. உழைத்தால் அந்த உழைப்பே அரசியலில் தூக்கிவிடும்” என நெகிழ்ச்சிப்பட குறியிருந்தார். இந்த நிலையில், அவர் 7,222 வாக்குகள் பெற்று வெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவருக்கு அடுத்தபடியாக விஜய் மக்கள் இயக்கம், அதிமுக கட்சி வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் விஜய் மக்கள் இயக்க கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







