மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த பலரின் உடல்கள் மீட்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களை கடந்து விட்டதால் சடலங்களில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மியான்மரில் நேற்று முன்தினம் மூதாட்டியும், நேற்று இளைஞர் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், மியான்மரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,003 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,500 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.








