சென்னையில் மனநலம் பாதித்து சாலையில் சுற்றித்திரிந்தவரை முடிவெட்டி, புத்தாடைகள் வாங்கி கொடுத்து புது மனிதனாக மாற்றிய போக்குவரத்து காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
சென்னை புரைசைவாக்கம் பகுதியில் நேற்று இரவு வயதான நபர் ஒருவர் முகம் மற்றும் தலையில் பெயிண்டுகளுடன் பார்ப்பதற்கே அகோரமாக இருந்து கொண்டு, சாலையில் உள்ள தடுப்புகளை கீழே தள்ளுவதும், வண்டிகளை கீழே தள்ளுவதுமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல உள்ளதாக கன்ட்ரோல் ரூமிலிருந்து தகவல் கிடைத்தது.
பின்னர் தகவலறிந்து வேப்பேரி டிராபிக் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் உடலில் 4க்கும் மேற்பட்ட சட்டைகளை அணிந்து கொண்டும், தலைமுடி, முகம், உடல் முழுவதும் பெயிண்ட் கொட்டி காய்ந்த நிலையில், அருவறுக்கத்தகையிலும் இருந்துள்ளார்.
உடனே இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு அவரிடம் சென்று பேசியபோது, தனது பெயர் கருணாகரன் (வயது 57) என்றும் புரசைவாக்கம், கரும்புதோட்டம், அவுசிங்போர்டில் வசித்தாகவும், தற்போது குடும்பத்தார் தன்னை சேர்ப்பதில்லை என்றும் கூறினார். உடனே, இன்ஸ்பெக்டர் அவரை ஆசுவாசப்படுத்தி, பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரது தலைமுடியை தொட்டு பார்த்தபோது, பெயிண்ட் கலவையால் முடிகள் ஒட்டிக்கொண்டு காய்ந்த நிலையில் இருந்ததால், முடிவெட்டும் நபரை அழைத்து வந்து முடியை வெட்டினார்.
பின்னர் கருணாகரனை, குளிக்க வைத்து அவருக்கு புத்தாடைகள், வாங்கி கொடுத்தபோது, தனக்கு தொப்பி வேண்டும் எனவும், ஜுஸ் வேண்டும் எனவும், சாப்போடு வேண்டும் எனவும் கேட்டுள்ளார். உடனே அவருக்கு அனைத்தையும் வாங்கி கொடுத்து புது மனிதனாக்கி, அவ்வழியே அழைத்துச் சென்று கருணாகரனை அவரது வீட்டில் விட்டு கருணாகரனின் மனைவியிடம் அறிவுரைகள் கூறி சென்றார்.
டிராபிக் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு, கருணாகரனை புது மனிதன் போல மாற்றி அறிவுரைகள் கூறி வீட்டில் விட்ட நிகழ்ச்சியால், தானா தெரு, மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள் மன நிம்மதி அடைந்தனர். மேலும் இன்ஸ்பெக்டரை வாழ்த்தினர். கருணாகரன் அவ்வப்போது சாலைகளில் சுற்றி திரிவதோடு, வியாபாரிகளுக்கும் இடையூறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை புது மனிதனாக மாற்றிய டிராபிக் இன்ஸ் பெக்டருக்கு அப்பகுதி வியாபாரிகளும் நன்றி கூறினர்.
– இரா.நம்பிராஜன்









