நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா
ரமீஹா. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் மனு
ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில், குலசேகரத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பிரபா என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறினார்.
பின்னர் அதற்கு பணம் கேட்டார். இதையடுத்து நான் பல தவணைகளாக ரூ.1 கோடியே 25 ஆயிரம் கொடுத்தேன்.ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டபோது தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தார். பின்னர் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.
இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திரும்ப தரவில்லை. எனவே பிரபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்,
மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் பிரபா பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து பிரபா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.








