டி.ஆர்.பாலு மனைவி ரேணுகா தேவி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

டி.ஆர்.பாலுவின் மனைவி உடலுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி.யின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு (79) உடல்நலக்குறைவால் காலமானார்.

நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்துள்ளர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறைந்த ரேணுகா தேவியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது மறைவு குறித்து முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“கழகப் பொருளாளரும் – முன்னாள் மத்திய அமைச்சரும் – என் ஆருயிர் நண்பருமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு அவர்களது மறைவால் வேதனையடைந்தேன்.

நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் – தம்பி டி.ஆர்.பி.ராஜாவும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.