மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் இருந்து குற்றாலத்திற்கு ஒரு குழுவினர் சுற்றுலா சென்றனர். மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அந்த வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை கவனிக்காமல் அதன் மீது சுற்றுலா வாகனம் திடீரென மோதியது.
இதில் சுற்றுலா வேனின் முன்பகுதி முழுவதும் கடுமையாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

தண்ணீர் லாரியை நடு ரோட்டில் நிறுத்தி வைத்த லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, இந்த விபத்து காரணமாக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.







