ஏழை எளிய மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்தார்.
திருச்செந்தூர் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் எஸ்.வடமலைபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்செந்தூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் எல்லா திட்டங்களும் கிடைக்கும் என முதல்வரும், துணை முதல்வரும் சொல்வதை சுட்டிக்காட்டினார்.
தமிழக மக்கள் விரும்பாத நீட் தேர்வை அவர்கள் அனுமதித்திருப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். மேலும், ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வை அவர் நுழையவிடவில்லை, அதே போல ஏழை எளிய மக்களை பாதிக்கிற எந்த திட்டத்தை ஜெயலலிதா இறுதி முச்சு இருக்கும் வரை அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் உயர் பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்றும் டிடிவி தினகரன் வருத்தம் தெரிவித்தார். மேலும், உண்மையான ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலர அமமுக, ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.







