கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்ட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மண்டாஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலை, பழைய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் சீற்றம் குறித்து நேரில் பார்வையிட்டார். மேலும் அலைகள் அதிக அளவில் எழும்பியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கடலுக்கு அருகில் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதை தொடர்ந்து போலீசார் கடற்கரை ஓரம் இருந்தவர்களை எச்சரித்து வெளியேற்றினர்.

தொடர்ந்து கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கற்களை கொட்டி அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் மீனவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்ட ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்தவர்கள்க்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.







