இன்று முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி…!

தமிழ்நாட்டில் இன்று முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு…

தமிழ்நாட்டில் இன்று முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில்  தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இதனை விரிவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில்   நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்துவது , காய்கறி அங்காடி மூலம் நகர பகுதிகளில் காய்கறி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  300 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்தது.

அதன்படி தமிழ்நாட்டில் மேலும் 300 ரேசன் கடைகளில் கடந்த ஜூலை 12ம் தேதி தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு சந்தையில்  இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த கூடுதலாக 200 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படுவதாக கூறினார். தேவையான அளவு தக்காளி இல்லாததால், நடமாடும் கடைகள் குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.